இமாமின் பிறப்பு

இமாமின் பிறப்பு
இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் ஹிஜ்ரி 255ல் (கி.பி.868)ஷஃபான் மாதம் நடுப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சாமர்ரா நகரில் தமது பிதா இமாம் ஹஸன் அஸ்கரியின் வீட்டில் பிறந்தார்கள்.
அவர்களது தந்தை பதினோராவது இமாமாகிய ஹஸன் அல்அஸ்கரி அலைஹிஸ் ஸலாம் அவர்களது தாயின் பெயர் நர்கிஸ், சூசன், ஸெய்கல் என்றும் அப்பெண்மணி அழைக்கப்படுகிறார்.
அப்பெண்மணி ஈசா நபியின் ஹவாரியூன்களில் ஒருவரான சம்ஊன் என்பவரின் பரம்பரையில் வந்த யோசுவா என்ற ரோம் மன்னரின் புதல்வியாவார்.
அவர் அஹ்லுல் பைத்தினரிடத்தில் மிக கண்ணியமாக நோக்கப்பட்டு வந்தார்.
அன்னை ஹகீமா எனும் இமாம் ஹாதியின் சகோதரி கூட இவர் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார். எந்தளவுக்கெனில். அன்னை ஹகீமா தன்னை அவரது சேவகியாகக் கருதினார். மற்றும், எனது தலைவியே, என்றே அவரை அழைப்பார்கள்.
நர்ஜிஸ் அம்மையார் ரோமில் இருந்த போது ஆச்சரியமான பல கனவுகளைக் கண்டார். ஒரு தடவை இறைத்தூதரையும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் கனவில் கண்கின்றார். அவர்கள் இருவரும் அப்பெண்மணியை இமாம் ஹஸன் அஸ்கரீக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்..
பிறிதொரு கனவில், அவர்கள் ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா ஸலாமுல்லாஹி அலைஹாவின் அழைப்பின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். இருந்தும் அதனை தனது குடும்பத்தாரிடத்திலும் சூழ உள்ளவர்களிடத்திலும் மறைத்து வந்தார்கள். அப்போது முஸ்லிம்களுக்கும் ரோமர்களுக்கும் இமையில் நடந்த போரில் மன்னர் யுத்த முனைகளில் முன்பகுதிகளில் இருந்து படைகளை வழிநடத்தினார். எல்லை நோக்கி நகரும் படைகளுக்குப் பின்னால் மறைவாக தன் அடிமைகளையும் வேலையாட்களiயும் அழைத்துக் கொண்டு செல்லுமாறு அன்னை நர்கிஸுக்கு கனவில் ஒரு பெரியாரின் கட்டளை வந்தது.
அன்னையார் தான் கண்ட அனைத்தையும் நுணுக்கமாக நடைமுறைப்படுத்தி எல்லையை வந்தடைந்தார்கள். முஸ்லிம்களின் முன்னணிப் பாடையணி ஒன்றினால் இவர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டனர். அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இதிலே உள்ளனர் என்ற தகவலை அறியாத முஸ்லிம்கள் அவர்கள் அனைவரையும் பக்தாதுக்கு அழைத்துச் சென்றனர்.
இவை அனைத்தும் பத்தாவது இமாமாகிய இமாம் ஹாதியின் கடைசி கால கட்டத்தில் நடந்தவையாகும். இமாம் ரோம் மொழியில் எழுதப்பட்ட ஒரு மடலை தம் தூதுவர் மூலமாக பக்தாதில் இருந்த நர்கிஸுக்கு அனுப்பி வைத்தார்கள். அடிமை விற்பவர்களிடம் இருந்து நர்கிஸை வாங்கிக் கொண்டு இமாமிடம் வந்தார்கள் அத் தூதர்.
அவ்வேளை இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் அப்பெண்மணி முன்பு கண்ட கனவுகளை ஞபகப்படுத்தி நன்மாராயம் கூறினார். சமீபத்தில் இமாம் அஸ்கரியின் மனைவியாகவும் இவ்வுலகையே நீதத்தால் நிரப்பி, தனது ஆட்சியை அனைத்து உலகுக்கும் பரப்பக்கூடிய ஒரு குழந்தைக்குத் தாயாகும் பாக்கியம் இருப்பதாகவும் கூறினார்.
மார்க்க சட்டதிட்டங்களையும் இஸ்லாமிய பண்புகளையும் கற்றுக் கொடுக்குமாளும் நர்கிஸின் அனைத்து விடயங்களையும் கவனிக்குமாறும் அஹ்லுல்பைத்தைச் சேர்ந்த கண்ணியமிக்க அன்னையும் இமாமின் சோதரியுமான ஹகீமாவிடம் ஒப்படைத்தார்கள்.
குறிப்பிட்ட சில காலங்களின் பின்பு அன்னை நர்கிஸ் இமாம் ஹஸன் அஸ்கரியின் மனைவியாகினார் இமாமை சந்திக்கும் போதெல்லாம் அன்னாருக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பது அன்னை ஹகீமாவின் வழக்கம்.
ஹகீமா கூறுகிறர்: 'ஒரு நாள் நான் இமாமிடம் சென்று வழமை போன்று பிரார்த்தித்தேன். அப்போது இமாம் 'மாமியே! நீங்கள் இறைவனிடத்தில் வழங்குமாறு பிரார்திக்கின்ற குழந்தை இன்றிரவு பிறக்கின்றது என்றார்கள்.
ஹகீமா சொல்கின்றார்: 'ஒருமுறை நான் அங்கு சென்ற போது நர்கீஸ் எனது செருப்பைக் கழற்றிவிட முன்வந்தார். 'என் தலைவியே தங்களது பாதணிணைக் கழற்றவந்தேன்' என்று கூறினார்.
அதற்கு நான் 'நீங்கள் தான் எனது தலைவி வழிகாட்டி என்று கூறியவாறு, நீங்கள் எனக்கு பாதணியைக் களைந்து விடுவதையோ எனக்கு பணிவிடை செய்வதையோ இறைவன் மீது ஆணையாக நான் விரும்பமாட்டேன். மாறாக நானே உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.' ஹகீமாவின் வார்தையைக் கேட்ட இமாம் ஹஸன் அஸ்கரி, அலைஹிஸ் ஸலாம் 'என் மாமியே! இறைவன் உமக்க நல்லருள் புரிவானாக!' என்று கூறினார்கள்.
அன்று இமாமோடு சூரியன் மறையும் வரை இருந்து விட்டு பின்பு எழுந்து செல்லத் தயாராகி, வேலைக்காரப் பெண்ணிடம் எனது உடையைக் கொண்டு வருமாறு கூறினேன்.
'மாமியே! நீங்கள் இன்றிரவை எங்கள் வீட்டில் கழியுங்கள். இறைவன் அருளால் இன்றிரவு கண்ணியமிக்க ஒரு குழந்தை பிறக்கவுள்ளது. இறைவன் அதனைக் கொண்டு மரணித்துக் கிடக்கும் இவ்வுலகை உயிர் பெறச் செய்வான்.' என்றார்கள் இமாம்.
'அக்குழந்தை யார் மூலமாக கிடைக்கும்? நர்கிஸிடமோ கற்பவதிக்குரிய எந்த அடையாளமும் தென்படவில்லையே' என்று நான் கேட்டேன்.
அதற்கு இமாமவர்கள், 'வேறு எவர் மூலமுமல்ல, நர்கிஸ் மூலமாகவே தான்' என்றார்கள்.
ஹகீமா சொல்கின்றார்: 'நான் நர்கிஸிடம் சென்று அப்பெண்மணியைக் கட்டித் தழுவி உற்று நோக்கினேன். கர்ப்பம் தரித்திருப்பதற்குரிய எந்த அடையாளமும் அவரில் தென்படவில்லை. நான் இதை இமாமிடம் தெரிவித்தேன். அதற்கு இமாம் அலைஹிஸ் ஸலாம் புன்முறுவல் செய்தவர்களாக, 'பஜ்ருடைய நேரம் வருகின்ற போது, அவரது கர்ப்பம் தெளிவாகும்' என்றார்கள.
இப்பிரசவம் ஹஸ்ரத் மூஸாவின் தாயின் பிரசவத்துக்கு நிகரானதாகும். ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ் ஸலாம் பிறக்கும் வரை அவரது தாயார் கர்ப்பவதி தான் என்று எவரும் அறிந்திருக்கவில்லை. ஏனென்றால், பிர்அவ்ன், மூஸாவைத் தேடி கர்ப்பவதிகளின் வயிற்றைப் பிளந்து காலமது. இதுவும் அது போன்ற ஒன்றுதான். எனவே, தற்கால பிர்அவ்ன்களிடம் இருந்து இதுவும் மறைக்கப்படுகின்றது என அவர் விளக்கினார்.
அன்னை ஹகீமா மேலும் விபரிக்கிறார்: நான் பஜ்ருடைய நேரம் வரை அப்பெண்மணியை அவதானித்துக் கொண்டிருந்தேன். அவரோ எவ்வித அசைவுமின்றி பஜ்ருடைய நேரம் வரை தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அவரில் ஒரு மாற்றம் தென்பட, அவரை எனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். அப்போது இமாம் என்னை அழைத்து, அப்பெண்மணியின் மீது, 'இன்னா அன்ஸலான' சூராவை ஓதுமாறு பணித்தார்கள்.
அதனை நான் ஓதினேன். இன்னும் அவரிடம் 'உமது நிலை எவ்வாறு உள்ளது' என்று வினவினேன். அதற்கு அவர், 'உமது தலைவர் உமக்கு கூறியது போன்று விடயம் தெளிவாகி விட்டது' என்றார்கள் நான் எனக்கு ஏவப்பட்டது போன்று ஓதிக் கொண்டிருந்தேன். திடீரென வயிற்றிலிருந்து குழந்தை பதில் கொடுத்தது. நான் ஓதியது போல் ஓதி என் மீது ஸலாம் கூறியது.
ஹகீமா தொடர்ந்து கூறுகையில்: அதனைக் கேட்டு நான் பயந்து விட்டேன் அப்போது இமாம் என்னை அழைத்து 'இறைவனின் இவ்விடயத்தைப் பற்றி நீர் பயப்படவேண்டாம். இறைவன் சிறுவயதிலே எங்களைப் பேசவைக்கின்றன. பெரிய வயதில் இவ்வுலகில் அவனது அத்தாட்சியாக எங்களை ஆக்கியுள்ளான்' என்று கூறினார்கள்.
நான் பேசி முடியும் போது பார்த்தேன் நர்கீஸைக் காணவில்லை எனக்கும் அவருக்குமிடையில் ஒரு திரை விழுந்திருந்தது. இமாமிடம் சென்ற போது அவர்கள் 'எனது மாமியே! நீங்கள் செல்லுங்கள் அவரை அவரது இடத்தில் இருக்கக் காண்பீர்கள்' என்று எனக்கு கூறினார்கள்.
நான் மீண்டும் சென்றேன். என்கும் அவருக்கும் இடையிலிருந்த திரை நீங்கியது. நான் அவரிடம் இருந்தேன். எனது பார்வையை மங்க வைக்கும் ஓர் ஒளி பிரகாசிப்பதைக் கண்டேன்.
அது ஒரு குழந்தை தனது நெற்றியை நிலத்தில் பதித்து சஜூது செய்த வண்ணம் இரு பெருவிரல்களை வானத்தின் பக்கம் உயர்த்தி பினவரமாறு கூறியது. 'அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, அவனுக்கு இணை கிடையாது. எனது பாட்டன் அவனது தூதர் என்றும் எனது தந்தை முஃமின்களின் தலைவர் என்றும் சாட்சி சொல்கின்றேன்.' பின்பு ஒவ்வொரு இமாமாக எண்ண ஆரம்பித்தார்கள். பின்னர், 'இறைவா! எனது வாக்குறுதியை எனக்கு நிறைவேற்றுவாயாக. எனது விவகாரத்தை பூர்த்தியாக்கித் தருவாயாக. எனது பாதங்களையும் உறுதிப்படுத்துவாயாக. என்னைக் கொண்டு பூமியை நீதியால் நிரப்புவாயாக' எனப் பிரார்த்தித்தார்கள்.

கருத்துக்கள்

اஒரு கருத்துரையை

*ஆஸ்டெரிக் குறிக்கப்பட்ட புலங்கள் நிச்சயமாக மதிப்பு இருக்க வேண்டும்.